News

  • Home
  • News
  • Chengai-Arakkonam Double Railway Track Project Allocated ₹1,538 Crore; Southern Railway Ready to Operate Additional Trains

Chengai-Arakkonam Double Railway Track Project Allocated ₹1,538 Crore; Southern Railway Ready to Operate Additional Trains

Chengai-Arakkonam Double Railway Track Project Allocated ₹1,538 Crore; Southern Railway Ready to Operate Additional Trains

தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, செங்கல்பட்டு - அரக்கோணம் ஒரு வழி ரயில் பாதையை, 1,538 கோடி ரூபாயில் இரட்டை வழிப் பாதையாக மாற்ற, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த நிலையில், பணிகளை துவக்க நிதி கேட்டு, ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. திட்டத்தை எப்போது செயல்பாட்டுக்கு வரும் என, பல்வேறு மாவட்ட மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில், செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வரை, 10 மின்சார ரயில்கள் மற்றும் வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக, சென்னை கடற்கரைக்கு இரண்டு மின்சார ரயில்களும், செங்கல்பட்டு வரை ஒரு மின்சார ரயிலும் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு - அரோக்கோணம் வரை 68 கி.மீ.,க்கு ரயில்வே இருப்புப்பாதை, ஒரு வழிப்பாதையாக உள்ளது. இந்த இருப்புப்பாதையில் செங்கல்பட்டு, ரெட்டிப்பாளையம், பாலுார், பழையசீவரம், வாலாஜாபாத், நத்தப்பேட்டை, காஞ்சிபுரம், திருமால்பூர், தக்கோலம் வரை, ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன.

இதில் பாலுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகியவை முக்கிய ரயில் நிலையங்களாக உள்ளன. காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களில் பலர், சென்னை தலைமை செயலகம், உயர் நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள், தினமும் மின்சார ரயில்களில் சென்று, மீண்டும் இதே ரயில்களில் வீடுகளுக்கு திரும்பிச் செல்கின்றனர். இதுமட்டுமின்றி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு, ஊழியர்கள் பலர் ரயிலில் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், மின்சார ரயில்களில், தினமும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த சுற்றுலா தலமாக இருப்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு - அரக்கோணம் வரை, ரயில்வே இருப்புப்பாதை ஒரு வழி பாதையாக இருப்பதால், கூடுதல் ரயில்கள் இயக்க முடியாமல் உள்ளது.

இதுமட்டுமின்றி விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் ஒரு வழியில் செல்லும்போது அவற்றுக்கு வழிவிட பாலுார், வாலாஜாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் நிறுத்தப்படும்.

இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணியர் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, செங்கல்பட்டு - அரக்கோணம் வரை, ரயில்வே இருப்புப்பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றக்கோரி, நீண்ட காலமாக ரயில் பயணியர், ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்து வந்தனர்.

இதுமட்டுமின்றி, மாலை நேரங்களில், எதிரே வரும் ரயில்களுக்காக, மின்சார ரயில்கள், பாலுார் ரயில் நிலையம் அருகில் நிறுத்தப்படுகின்றன.

இங்கு நீண்ட நேரம் ரயில் நிற்பதால், பாதிக்கப்பட்ட ரயில் பயணியர் அடிக்கடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக பயணியரிடம் உறுதி அளிக்கின்றனர். ஆனால், ரயில்வே இருப்புப்பாதை இருவழியாக மாற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு - அரக்கோணம் வரை, ரயில்வே இருப்புப்பாதையை, தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ரயில்வே இருவழி பாதை திட்டத்தை செயல்படுத்தவது தொடர்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், கடந்த மாதம் 15ம் தேதி சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற ரயில்வே பணியர் சங்கத்தினர், திட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும், திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, 1,538 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை, ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.

இதற்கான ஒப்புதல் பெற்று, அடுத்த கட்டமாக நிதி பெறும் முயற்சியிலும் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதனால், திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் 13 ரயில்கள் இயக்கும் இடத்தில், 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும்.

பயணியர் ரயில் மட்டுமின்றி, சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரயில்வே நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், பயனுள்ள திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என, பல்வேறு மாவட்ட மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 

Source: dinamalar.com

// any question you have //

+91 93606 93606